தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 ஜனவரி, 2017

பூ அரசுகள்!



சில நேரம் மனதை பறி கொடுத்துவிட்டு வந்து எதையும் செய்ய முடியாது தவித்துக்கொண்டிருக்கின்ற குணம் பள்ளிப்பருவ காலத்தில் இருந்து இக்கணம் வரை ...எனக்கு மாறியதாய் தெரியவில்லை.பழைய காதலிகளை மன்னிக்கவேண்டும் காதலியை மறுமுறை எங்கோ காணக்கிடைக்கிறபோது என்ன நடந்துவிடும்.யாரும் பார்க்காத திருவிழாக்கள் சில வேளைகளில் நடந்துவிடுவதுண்டு.மனதின் தூக்கத்தை கலைப்பது அது ஒருவிதமான மாயமந்திரம்.நான் சொல்லவருவது என்னுடைய கதை அல்ல உங்களுடைய கதையும்தான் பலவேளைகளில்
கறுக்காய்த்தீவின் கடலோரத்தில் உலவிக்கொண்டிருக்கிறேன்.மல்லிகை செடிகள் ஏன் அக் கடலோரத்தில் முளைக்கக்கூடாது என்ற அங்கலாய்ப்பு செவ்வந்திகள் ஆங்காங்கு பூத்திருந்தால் என்ன என்ற ஏக்கம் மருதோண்டி மலர்களின் வாசனை அக்காற்றில் மிதந்துகொண்டிருந்தால் என்ன என்ற ஆசை எல்லாவற்றையும் ஏதோ ஒன்று நிரப்பிக்கொண்டிருந்தது. பூவரசுகள்தான் அந்த ராச்சியத்தை ஆண்டு கொண்டிருந்தன.
நகரப் பண்பாடு தின்றுதீர்த்துக்கொண்டிருக்கின்ற எனது கிராமங்களில் பூவரசுகள் காணாமல் போய்விட்டன.போய்க்கொண்டும் இருக்கின்றன.அந்த வலிகளை தூண்டுகின்றது அந்த கடற்கரை.பொறாமையுடன் அந்த பூவரசுகளை திருவிழா மணிக்கடைகளை பார்க்கும் குழந்தைபோல பூவரசுகளை அதன் இலைகளை பூக்களை மொட்டுக்களை தேவலோக மலர் போல பார்க்கின்றேன்.ஒரு காலத்தில் எங்கள் வீட்டுவேலிகளில் எனது விழிகள் எல்லாம் நிரம்பி நின்ற பூவரசை நான் இழந்திருக்கின்றேன் இப்பொழுது.

யாரும் அளையாமல் இருக்கின்ற நிலைத்த அழகு பூவரசும் பூக்கள்.புதுவையின் பூவரசம் வேலியும் புலுனிக்குஞ்சுகளும் கவிதைகளுக்கு எவ்வளவு பொருத்தமானது.மனசோடு அதிக நெருக்கமாக பூவரசு எப்பொழுது இருந்திருக்கின்றது.புலுனிகளும் அப்படித்தான்.அவை வஞ்சகமற்ற அப்பாவித்தனமான பறவைகள்.தனித்து இருந்ததை நான் பார்த்ததில்லை.ஒருபோதும் புலுனிக்குஞ்சுகளை யாரும் கோவிப்பதும் இல்லை.அவற்றின் பேச்சு கலகலப்பானவை.கணீர் என்றவை அவற்றின் குரல்களும்.இவை சிறுவயதில் என் காதுகளுக்குள் புகுந்து கூடுகட்டியிருக்கின்றன.புலுனிகள் எங்கேயும் இறந்து கிடந்தால் நான் மிகுந்த கவலைப்படுவதுண்டு.நிச்சயம் அதற்கு மரணம் எதிரிகளால் நிகழ்வதில்லை.பூவரசும் அப்படித்தான்.முட்கள் அற்றவை.முரட்டுத்தனமான தோற்றமும் இல்லை.அன்பான மரம்.ஆக்கிரமிப்பதில்லை.ஆசுவாசப்படுத்துகின்றன.
இன்றைக்கு பல சிறுவர்களுக்கு பூவரசு தெரியாது.எங்களுக்கு அருகில் பல இடங்களில் அது இல்லை.சிறுவயதில் அந்த பெரிய மஞ்சள் பூ.பறித்து கையில் வைத்திருக்கும் போது ஏகப்பட்ட மகிழ்ச்சி.இலைகளை சுருட்டி பீப்பி செய்து எத்தனை கட்டை சுருதிகளில் ஊதியிருப்போம்.பூவரசுகள் பசுமையானவை.வேலிகளின் இருக்கும்போது அந்த வேலிகளுக்குள் வீடுகள் இருக்கும்போது அது இனிய அனுபவம்.மதில்கள் பூப்பதில்லை.காய்ப்பதில்லை.பழுப்பதில்லை.என்றைக்கும் வசந்தங்களை தொலைத்தபடி பிசுங்கான்களை முளைத்திருக்;;கின்றன.பூவரசம் வேலிகளுக்கு அப்பால் நீயும் இப்பால் நானும் பேசிக்கொண்டிருக்கும்போது எல்லைகள் தெரிவதில்லை.ஏன் வேலிகளில் அதிகம் இருந்த முள்முருக்கைகூட குத்தி காயங்கள் வந்ததாய் எனக்கு ஞாபகங்கள் இல்லை.இன்று பெரிய கதவுகளை இழுத்து திறந்து பூங்காக்களுக்குள் நுழைந்து திரும்புகின்றபோது எத்தனை காயங்கள்....
எங்கள் வீட்டு வேலியாக இருந்த பூவரசை நான் எப்படி இழந்தேன் என ஒரு முறை யோசித்துப்பார்க்கின்றேன்.என்னை அடையாளப்படுத்த எங்கெங்கோ தேடவேண்டியவனாய் ஆகிவிட்டேன் என்பது புரிகின்றது.என் வீட்டுக்கதையை என் சின்னவயதுக் கதையை நான் எழுதவேண்டுமெனில் முட்கம்பிச்சுருள்களில் இருந்து தொடங்கமுடியாது....பச்சைத்தகரங்களில் இருந்தும் தொடங்கமுடியாது.......மதில்களில் இருந்தும் ஆரம்பிக்க முடியாது....மண் அணைகளில் இருந்தும் ஆரம்பிக்க முடியாது....நிச்சயம் அது பூ அரசுகளில் இருந்தே ஆரம்பிக்கும் ஆரம்பிக்கவேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக