தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, September 25, 2014

மரம் ஏன் பெரிசா இருக்கு? இது குழந்தைகள் உலகம்


குழந்தைகள் வளர ஆரம்பிக்கும் போது சில அறிவுத்தனமாக கேள்விகளை கேட்பார்கள்.
பெரியவர்கள் கேட்கும் கேள்விளுக்கு கூட பதில் சொல்லிவிடலாம், ஆனால் குழந்தைகள் கேட்கும் கேள்வியே சற்று வித்தியாசமாக இருக்கும்.
அவர்கள் கேட்கும் கேள்விகளால் நம்மை வாயடைக்க வைத்துவிடுவார்கள்.
அர்த்தம் புரிந்து, உச்சி முகர்ந்து, முத்தமிட்டு, முடி கோதி, காதுகளை வருடி, நெஞ்சோடு இறுக்கி, தோளில் சாய்த்து, செல்லத்தின் பசி உணர்ந்து பால் ஊட்டுகிறாள் தாய்.
தாயின் வெளிப்பாடுகளில் இருந்து தன் கேள்விகளுக்கான பதில்களை குழந்தை சேகரிக்கிறது. குழந்தை, சுற்றியுள்ளவர்களின் உதட்டு அசைவுகளைப் புரிந்து கொண்டு வார்த்தைகளைக் கற்கத் தொடங்குகிறது. கேட்பதை மழலையில் திரும்பச் சொல்கிறது.
வார்த்தைகளால் வாக்கியங்களை அமைக்கிறது. பிறந்ததும் முதல் கண் அசைவில் இருந்தே குழந்தையின் கேள்விகள் தொடங்கி விடுகின்றன.
கியூரியாசிட்டி எனப்படும் தூண்டுதல் மற்றும் தேடல் இருக்கும் போது குழந்தைகள் கேள்வி கேட்கத் தயங்குவதே இல்லை.
பதிலைப் பற்றிக் கவலைப்படாமல் எழுகின்றன அவர்களின் கேள்விகள். சரியான பதில் கிடைக்கும் போது புரிதலுடன் அவர்களின் தேடலுக்கான எல்லைகளும் விரிவடைகின்றன.
சில பெற்றோர் குழந்தைகளின் கேள்விக்கு பதில் அளிக்காமல் தவிர்ப்பார்கள்... ‘வயதுக்கு மீறி கேள்வி கேட்கிறாய்’ என அடக்க முற்படுவார்கள். அதனால் குழந்தைகளின் ஆர்வம் தடுக்கப்படுகிறது.
கேள்வி கேட்பதை நிறுத்தும் போது தேடலும் புரிதலும் நின்று போகிறது. இது குழந்தைகளுக்குள் இயல்பாக வளரும் மற்ற திறன்களையும் மந்தமாக்கும்.
குழந்தைகளிடம் இரண்டு வகையான கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒரு விஷயத்தைச் சொல்லி, ‘இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?’ என்று கேட்பது ‘ஓப்பன் எண்டட்’.
இது போன்ற கேள்விகளுக்குக் குழந்தைகள் மனம் திறந்து தயக்கமில்லாமல் சுதந்திரமாக பதில் அளிக்கலாம்.
மழலை ததும்பும் வயதில் ‘உனக்கு அம்மா பிடிக்குமா, அப்பா பிடிக்குமா’ என்று பலர் கேட்பதுண்டு. இது குழந்தைகளின் உளவியலை தகர்க்கும் கேள்வி.
அம்மா, அப்பா இருவரிடமும் ஒரே மாதிரியான அன்பை வெளிப்படுத்தவே குழந்தை விரும்புகிறது. இப்படிக் கேட்கும் போது குழந்தை சங்கடத்தை எதிர்கொள்கிறது.
இது போன்ற கேள்விகள் ‘க்ளோஸ் எண்டட்’ எனப்படுகின்றன. இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
கேட்கும் கேள்விகளின் அடிப்படையில் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியும். ஆர்வத்தின் அடிப்படையில் எழுந்தவையா, சிக்கலான கேள்விகளா, எந்த விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.
பிரச்னைக்குரிய கேள்விகளாக இருந்தால், அவர்கள் எப்படிப்பட்ட மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பதையும் சிந்தனை ஓட்டத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
குழந்தையின் கேள்வி எப்படிப்பட்டதாக இருந்தாலும் பொறுப்பாக பதில் சொல்ல வேண்டியது பெற்றோர் மற்றும் சுற்றியிருப்பவர்களின் கடமை.
வீடு, பள்ளி, வெளியிடம் என எல்லா இடங்களிலும் குழந்தைக்கு பதில் கிடைக்க வேண்டும், பெற்றோர் கேள்வியைத் தெளிவாகப் புரிந்து கொண்டு பதில் தருவது நல்லது.

No comments:

Post a Comment