தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, September 28, 2014

சனிக்கிழமை விரதம்: திருப்பம் தரும் திருப்பதி!


நித்தமும் என் கருவறைக்கு வந்து தங்கத்தால் ஆன பூக்களால் என்னை அர்ச்சித்து வழிபடுகிறாய் அப்படி இருக்கும்போது அந்தத் தங்கப் பூக்கள் நேற்று எப்படி மண்ணால் ஆன பூக்களால் மாறிப் போயின என்பதுதானே உன் குழப்பத்துக்குக் காரணம்? உன் தூக்கத்தைத் தொலைத்து தவிப்பதற்கும் அதுதானே காரணம்? என்று கேட்டான் வேங்கடவன். ஆமாம் பகவானே... இந்த நாடும் மக்களும் நலமாக இருக்க வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன்தான் தினமும் உன் சன்னிதிக்கு வந்து தங்கத்தால் ஆன புஷ்பங்களை அர்ப்பணித்து வழிபடுகிறேன். என் வழிபாட்டில் திடீரென்று இந்தக் கோளாறு எப்படி ஏற்பட்டது? என் பக்தியில் ஏதேனும் தவறு நடந்து விட்டதா என்றெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து தவித்துக் கொண்டிருக்கிறேன் குரலில் சோகம் ததும்ப தொண்டைமான் சொன்னான். ஏழுமலையான் சிரித்தான். நீ அளிக்கும் தங்க புஷ்பங்களை ஏற்றுக்கொண்டால் மகிழ்கிறாய். அதை ஏற்க மறுத்தால் துக்கப்படுகிறாய். இது மனிதர்களின் இயல்பாக இருந்து வருகிறது. ஏற்க மறுத்ததன் காரணம் உனக்குத் தெரியாதல்லவா? மன்னனே... உன்னைப் போன்ற பல பக்தர்கள் என்னை நித்தமும் ஆத்மார்த்தமாக வழிபடுகிறார்கள். அப்படிப்பட்ட பக்தர்களுள் பீமய்யா என்கிற ஏழையும் ஒருவன். இதோ, இந்த ஆலயத்தில் இருந்து சற்றுத் öõதலைவில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் அவன் வசித்து வருகிறான். அவன் ஒரு குயவன். மண்பானைகளையும் பாண்டங்களையும் தயாரித்து தினமும் அதை விற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறான்.

ஏழையான அவன் தினமும் திருக்கோயிலுக்கு வந்து என்னைத் தரிசிக்க நேரம் கிடைக்கவில்லையே என்று வருந்தி, தான் வசிக்கும் குடிசையிலேயே என் உருவத்தை மண்ணில் வடித்து வைத்திருக்கிறான். திருமலை கருவறையில் உள்ள என்னை பூஜிப்பது போல் நினைத்துக்கொண்டு, தினமும் மண்ணால் ஆன பூக்களைக் கொண்டு அந்த விக்கிரகத்துக்கு வழிபாடு நடத்துகிறான். அது தவிர, எந்த நேரமும் அவனுக்கு என் சிந்தனைதான். மண்பாண்டம் செய்யும்போது, உணவு உண்ணும் போதும், உறக்கத்திலும் எனது திருநாமத்தையே உச்சரித்துக் கொண்டிருப்பான். அவனது பக்தி என்னை நெகிழச் செய்துவிட்டது. அதைப் போற்றும் விதமாகவும் இந்த உலகத்தோர் அறியும் விதமாகவும் அவன் எனக்கு அளித்த மண் பூக்களை நான் மனமாற ஏற்றுக் கொண்டேன். அதனால்தான் உன் தங்கப் பூக்களும் மண் பூக்களாகி விட்டன என்றார் பெருமாள். கனவு கலைந்தது. தொண்டைமானுக்குக் காரணம் புரிந்தது. தங்கப் பூக்களை அர்ச்சித்து வணங்கும் தனது பக்தியையே விஞ்சிய ஏழையின் பக்தி, அவனை வியக்கச் செய்து விட்டது. அந்த ஏழையின் பக்தித்திறனை பகவானை வணங்கும் காட்சி கண்டு பரவகம் கொள்ளவேண்டும் என்று விரும்பனாள். எனவே, அன்றைய தினம் காலை பீமய்யாவின் குடிசைக்குச் சென்றான். அது ஒரு சனிக்கிழமை. பெருமாளின் உத்தரவுப்படி ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து வழிபடுபவன் பீமய்யா. எனவே, வழக்கம்போல் பெருமாளின் திருநாமங்கள் சொல்லி, மண்ணால் ஆன பூக்கள் கொண்டு பெருமாளை வழிபட்டான் பீமய்யா. இந்த பூஜையை மறைந்திருந்து பார்த்தான் மன்னன்.

பெருமாளே... பொன்னையும் பொருளையும் கொடுத்து என்னை ஆட்கொள்ள நினைத்தாய். எனக்கு பொன்னும் வேண்டாம், பொருளும் வேண்டாம். உன் திருவடிகளை நிரந்தரமாகப் பற்ற வேண்டும். இதுதான் என் பிரார்த்தனை. இதை நான் அடையும் விதமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து வருகிறேன். உன் திருவடி நிழலை அடையும் பாக்கியத்தை விரைவில் எனக்குத் தா என்று வேண்டிக் கொண்டிருந்தான். அருகிலேயே அவனது மனைவியும் மெய்யுருகி வழிபட்டுக் கொண்டிருந்தான். பீமய்யாவின் முன்னால் திருப்பதி வேங்கடாசலபதியின் மண்ணால் ஆன விக்கிரகம் தங்கம்போல் ஜ்வலித்து மன்னனின் கண்களைக் கவர்ந்தது. பகவானின் திருப்பாதங்களில் பீமய்யா அர்ச்சித்த மண்ணால் ஆன பூக்கள் இறைந்து கிடந்தன. இனியும் மறைந்திருந்து பார்ப்பதில் மன்னனுக்கு விருப்பம் இல்லை. எனவே, பீமய்யா தம்பதியரின் முன்னால் போய் திடுமென நின்றான். நாட்டை ஆளும் மன்னன், திடீரென தங்களுக்கு முன்னால் வந்து நிற்பதைப் பார்த்ததும் அவர்கள் மிரண்டனர். தாங்கள் ஏதோ தவறு செய்துவிட்டோம். அதைக் கண்டிக்கவே மன்னன் இங்கு நேரில் வந்திருக்கிறான் என்று கணவனும் மனைவியும் அஞ்சினர். மன்னன் எதுவும் சொல்வதற்கு முன்னதாக ஓடிவந்து அவன் காலடியில் விழுந்தனர். தொண்டைமான் பதறிப்போய் சற்றே விலகி நின்றான். பிறகு தழுதழுக்கிற குரலில் பீமய்யா... உன் பக்தித்திறனைக் கண்டு வியந்தேன். உன்னைக் காணவே நான் இங்கு வந்தேன். என்னை நெகிழச் செய்துவிட்டாய் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே. அங்கே கோடி ரூபாய் பிரகாச ஒளியுடன் வேங்கடவன் தோன்றினார். அதே வேளையில் வானவர்கள் வீற்றிருக்க, ஒரு புஷ்பக விமானம் வந்து இறங்கியது.

கண்களைக் கவரும் அலங்காரத்துடன் காணப்பட்ட அந்த புஷ்பக விமானத்தில் இருந்து வானவர்கள் இருவர் இறங்கினர். பீமய்யாவையும் அவனது மனைவியையும் நோக்கிச் சென்றவர்கள். உங்கள் இருவரையும் வைகுண்டம் அழைத்துச் செல்ல வந்திருக்கிறோம். இது பெருமாள் உத்தரவு, வாருங்கள். என்று இரு கரங்களையும் விரித்து சகல மரியாதையுடன் அழைத்தனர். கண்களில் நீர் கசிய ஆனந்தத்துடன் பீமய்யாவும் அவன் மனைவியும் அந்த விமானத்தில் ஏறிக் கொண்டனர். தொண்டைமான் நெகிழந்து போனான். பகவானே... வைகுண்டத்துக்கு என்னையும் அழைத்துச்செல்ல மாட்டீர்களா? என்று வேங்கடவனைப் பார்த்து ஏக்கத்துடன் கேட்டான். அகம்பாவம் இல்லாத பக்தியோடு என்னை வழிபடு. உனக்கும் ஒருநாள் வைகுண்டம் வாய்க்கும். என்று சொல்லி அடுத்த நொடியில் பகவான் மறைந்து போனார். புஷ்பக விமானமும் கண்களை விட்டு மறைந்தது. தொண்டைமானும் வேங்கடவனை தூய அன்புடன் வழிபட்டு, ஒரு நாள் வைகுண்டம் போய்ச் சேர்ந்தான். ஏழை பீமய்யாவின் பக்தித்திறத்தை உலகுக்குத் தெரிவிப்பதற்காகவே அவனை ஆட்கொண்டு அருளினார் வேங்கடவன். பீமய்யாவுக்கு சனிக்கிழமை அன்று விரதம் இருக்குமாறு பெருமாள் அருளினார் என்பதாலும், புரட்டாசி சனிக்கிழமை தினத்தில் பெருமாள் இவனுக்கு வைகுண்டப் பதவி அளித்தார் என்பதாலும், சனிக்கிழமை தினத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபடும் வழக்கம் உருவானது என்பர்.

அதேபோல் பீமய்யாவுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் அவன் குயவன் என்பதால் மண்ணால் ஆன சட்டியிலேயே தனது நைவேத்தியத்தைப் பெருமாள் ஏற்கும் வழக்கமும் ஏற்பட்டது என்பர். நவகிரகங்களுள் எல்லோரையும் அச்சுறுத்தும் சனிபகவான் ஆயுள்காரகன் ஆவார். அதாவது, ஒருவரது பூரண ஆயுளுக்கு இவரே காரணம் ஆனால், அந்த சனி பகவானையே தன் கட்டுக்குள் கொண்டு வருபவர் பெருமாள். எனவேதான். சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கினால், சனியின் தாக்கம் குறையும். ஒருவரைப் பிடித்த பிணி, பீடைகள் திருஷ்டி போன்றவை விலகும் என்று சொல்லப்படுகிறது. வேங்கடவனைத் தியானித்து, சனிக்கிழமை விரதம் இருந்து அவனை வழிபட்டால், நலம் பெருகும்.

அனைவருக்கும் என் இனிய வணக்கம் மற்றும் இந்த நாளும் இனிய நாளாக வாழ்த்துக்கள் - சாம்

No comments:

Post a Comment